பதவிகளோ அதிகாரமோ உண்மையான தலைமைத்துவம் அல்ல! அலரி மாளிகையில் 350 பெண் சாரணர்களுக்கு விருதுகளை வழங்கிப் பிரதமர் ஹரிணி உரை!
உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல, பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பெண் பிள்ளைகளையும் இளம் பெண்களையும் வலுவூட்டும் ஒரு முதன்மை தன்னார்வ நிறுவனமான இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தினால், ஜூலை 19 ஆம் திகதி அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட “ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருது விழாவில்” கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் குறிப்பிட்டார். இம்முறை விழாவில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் கரங்களால் பெண் பிள்ளைகளுக்குப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
350 உயரிய விருதுகள் வழங்கி வைப்பு: சிறுமிகளின் ஒழுக்கம், நெகிழ்ச்சித்திறன், நேர்மைத்தன்மை மற்றும் பிறருக்குச் சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டி, 338 ஜனாதிபதி விருதுகளும் 12 பிரதமர் விருதுகளும் உள்ளடங்கலாக மொத்தமாக 350 விருதுகள் இந்த விழாவில் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதமரின் விசேட உரை: தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், பெண் சாரணர் இயக்கத்தின் பிரதான வலிமைகளில் ஒன்று, பின்னணி அல்லது திறமை என்னவாக இருப்பினும் சகல சிறுமிகளுக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதாகும் எனச் சுட்டிக்காட்டினார். அத்துடன், பொறுப்புணர்வுடன் செயலாற்றுவதும், பரஸ்பர பரிவுடன் செவிமடுப்பதும், பிறரின் நலனுக்காக உழைத்தலுமே ஒரு உண்மையான தலைவரின் பண்புகளாகும் என்றும் அவர் கூறினார்.
“கடந்த காலத்தில் பெண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளே இருந்தன. ஆனால் இன்று அனைத்துத் துறைகளிலும் யுவதிகளுக்கும், பெண்களுக்கும் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இன்று இந்த நாடு இருக்கும் நிலையை விட, சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இளம் தலைவிகளாகிய நீங்கள் முன்வர வேண்டும்” எனப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
மேலும், தற்போதைய பொருளாதார மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு மத்தியில் நிலையான தேசிய முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்க வேண்டுமாயின், பொருளாதார வளர்ச்சி மாத்திரமன்றி, ஒழுக்கநெறியும் சமூகப் பொறுப்புணர்வும் கொண்ட பிரஜைகளை உருவாக்குவது இன்றியமையாததாகும் எனக் குறிப்பிட்ட பிரதமர், அதற்காக இலங்கை பெண்கள் சாரணர் இயக்கம் ஆற்றி வரும் பங்களிப்பைப் பாராட்டினார்.
“தயாராக இருங்கள்” (Be Prepared) என்ற இலட்சிய நோக்கத்தை முன்னிலைப்படுத்தி இயங்கும் பெண்கள் சாரணர் இயக்கம், 1917 மார்ச் 21 ஆம் திகதி, கண்டி பெண்கள் உயர்தர பாடசாலையில் செல்வி ஜெனி கால்வர்லி கிரீன் அவர்களால் முதன்முதலாக இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. வயதுப் பிரிவுகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் சமனலி, குடா மிதுரி, பெண் சாரணர், ரேன்ஜர், இளம், விசேட திறமைகளுடைய மற்றும் சமூக பெண் சாரணர் என ஏழு பிரிவுகளின் ஊடாக இவ்வியக்கம் செயற்படுகிறது. இதில் ஒரு பெண் சாரணர் பெறக்கூடிய மிக உயர்ந்த அங்கீகாரம் “ஜனாதிபதி விருது” ஆகும். ரேன்ஜர் பெண்சாரணர் பிரிவின் மிக உயர்ந்த அங்கீகாரமாகப் பிரதமர் விருது வழங்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தின் தலைவி ஸ்வர்ணிகா பிடிகல, முதன்மை ஆணையாளர் கலாநிதி குஷாந்தா ஹேரத், ஜனாதிபதி பெண் சாரணர் ஆணையாளர் புஷ்பா பெரேரா, பிரதமர் பெண் சாரணர் ஆணையாளர் திருமதி அருணி கருணாரத்ன உள்ளிட்ட உயர் அதிகாரிகள், விருது பெற்ற பெண் சாரணர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: பணியிடத்தில் உங்களின் தைரியமான முடிவுகள் நற்பலன்களைத் தரும். பொருளாதார நிலை சீராக…
கனடா டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு! 4 மாதங்களில் நடந்த 2ஆவது சம்பவம்! கனடாவின் மிகப்பெரிய…
மதுசார இழப்பு எல்லை 0.1% ஆகக் குறைப்பு! மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு! மதுபான உற்பத்தி மற்றும்…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்து வரும் பதுளை – சொரணாதோட்ட பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள…
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 383 வேலைவாய்ப்புகள்! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு! இலங்கை பொலிஸ் துணைச் சேவையில் (Police Auxiliary…
களுவாஞ்சிக்குடியில் ரூ. 29.5 மில்லியனில் நவீன தபால் நிலையம்! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைத்தார்! களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நவீன…