உலகளாவிய கால்பந்து ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ள 2026 FIFA உலகக் கோப்பைத் தொடரின் முதலாவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடரை நடத்தும் நாடான மெக்சிகோ (Mexico) வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
‘ஏ’ (Group A) பிரிவின் கீழ் இடம்பெற்ற இப்போட்டி, மூன்று உலகக் கோப்பை கால்பந்து தொடர்களுக்குப் பங்களிப்பு வழங்கிய உலகின் புகழ்பெற்ற மெக்சிகோவின் எஸ்டாடியோ அஸ்டெகா (Estadio Azteca) மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
ஒரேயொரு உலகக் கோப்பை மகுடத்திற்காக வரலாற்றில் முதன்முறையாக 48 நாடுகள் போட்டியிடும் இந்த ஆண்டின் உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின.
- முதல் பாதி ஆட்டம்: போட்டியின் முதல் பாதியில் மெக்சிகோ அணியின் நட்சத்திர வீரர் ஜூலியன் குவினோன்ஸ் (Julian Quinones) அதிரடியாக முதலாவது கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதன்படி முதல் பாதி ஆட்டம் முடியும் போது மெக்சிகோ 1-0 என முன்னிலையில் இருந்தது.
- இரண்டாவது பாதி ஆட்டம்: இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தைச் செலுத்திய மெக்சிகோ வீரர்கள், போட்டியின் 67ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலையும் புகுத்தினர். ரவுல் ஜிமினெஸ் (Raul Jimenez) அடித்த இந்த கோலால் மைதானத்தில் திரண்டிருந்த மெக்சிகோ ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்காவுக்கு (South Africa) எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணி அபார வெற்றி பெற்று, இந்த ஆண்டு உலகக் கோப்பையின் முதல் புள்ளிப் பட்டியலைத் தன்வசப்படுத்தியது.
மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக் கோப்பைத் தொடரின் கனடாவுக்கான உத்தியோகபூர்வ தொடக்க விழா இன்று நடைபெறவுள்ளதுடன், அமெரிக்காவில் நடத்தப்படும் பிரம்மாண்டமான தொடக்க விழா இன்று பிற்பகல் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் உள்ள அதிநவீன மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




