முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், முன்னாள் பிரதமரின் அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ இன்று (17) காலை கொழும்பில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபாலவினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட விசேட முறைப்பாடு ஒன்றுக்கு அமைவாக, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகச் செயல்பாடுகள், நிதிப் பயன்பாடு மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பாகத் திலங்க சுமதிபாலவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளின் முன்னிலையில் ஆஜராகிய யோஷித ராஜபக்ஷவிடம் தற்சமயம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



