இலங்கையின் ஏற்றுமதித் துறையில் வரலாற்று சாதனை! 5 மாதங்களுக்குள் 7.3 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடந்து வருமானம் அசுர வளர்ச்சி!
2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையின் ஏற்றுமதித் துறை கணிசமான மற்றும் திருப்திகரமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 7.3 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற பிரம்மாண்ட எல்லையைத் தாண்டியுள்ளது.
இலங்கைச் சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள தற்காலிகத் தரவுகள் மற்றும் இரத்தினக்கல், ஆபரணங்கள் மற்றும் எரிபொருள் தயாரிப்புகளுக்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 2026 ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி வருமானம் 7,393.39 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7.56 சதவீத பாரிய வளர்ச்சியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 5 மாத காலப்பகுதியில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் (Merchandise Exports) மட்டும் 5,758.44 மில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளதுடன், இது கடந்த வருடத்தை விட 7.63 சதவீத வளர்ச்சியாகும்.
அதேபோன்று, சேவைகள் ஏற்றுமதித் துறையும் (Services Exports) கணிசமான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன், 1,634.95 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 7.31 சதவீத உயர்வாகும் என அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2026 மே மாதத்தில் மட்டும் இலங்கையின் ஏற்றுமதித் துறை அசுர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, மே மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி 18.25 சதவீதத்தாலும், சேவைகள் ஏற்றுமதி 18.67 சதவீதத்தாலும் வளர்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த இலங்கை, 2026 இல் சர்வதேச சந்தையில் தனது வர்த்தக ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தி வருவதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.



