இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 5,000க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே மேடையில் பங்கேற்ற ‘சங்கமம் 2026’ (SANGAMAM-2026) மாபெரும் பரதநாட்டிய உலக சாதனை நடனப் பயிற்சி நிகழ்வு இன்று (14) காலை கொழும்பு காலி முகத்திடலில் (Galle Face Green) மிக விமரிசையாக நடைபெற்றது.
தொன்மையும் பாரம்பரியமும் வாய்ந்த தமிழ் மக்களின் அடையாளமான பரதநாட்டியக் கலையின் பெருமையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நோக்கிலும், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் (Guinness World Records) இடம்பிடிக்கும் இலக்குடனும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையின் ‘சங்கமம் லியா ஹொலிடேஸ்’ (Sangamizh Liya Holidays) மற்றும் இந்தியாவின் ‘சங்கமம் குளோபல் அகாடமி’ (Sangamam Global Academy) ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மகா நடனப் பேரணியை ஒருங்கிணைத்திருந்தன. இன்று காலை 6:00 மணிக்கு கொழும்பு கடலோரக் காற்றுக்கு மத்தியில், வண்ணமயமான பாரம்பரிய உடைகளுடன் பல்லாயிரக்கணக்கான கலைஞர்கள் ஒரே தாளத்தில், ஒரே நேர்த்தியில் ஆடிய பரதநாட்டியம் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்த மாபெரும் சர்வதேச நிகழ்வு வெறும் உலக சாதனை முயற்சி மட்டுமல்லாது, கலை, கலாசாரம், ஆன்மீக ஒழுக்கம் மற்றும் இலங்கை – இந்தியா இடையிலான பல தசாப்த கால நட்புறவை உலகிற்கு பறைசாற்றும் உன்னத பாலமாக அமைந்திருந்ததாக கலை விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதன் அங்குரார்ப்பண மற்றும் ஆரம்பக்கட்டப் பயிற்சி நிகழ்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் மட்டக்களப்பில் உள்ள சுவாமி விபுலானந்தா இசைநடனக் கல்லூரியின் கலையரங்கில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்றைய பிரதான நிகழ்வில் இரு நாடுகளையும் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நடன ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.




