தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் ஆகியோருக்கு இடையே விவாகரத்து கோரித் தொடரப்பட்ட வழக்கு, இன்று திங்கட்கிழமை (15) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியினருக்கு, ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், குடும்பக் கருத்து வேறுபாடுகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தத் தகவல் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
முன்னதாக, ஏப்ரல் 20ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரும் ஆஜராகாததால், ஜூன் 15ஆம் திகதியான இன்றைய விசாரணையில் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், இன்றைய விசாரணையின் போதும் இரு தரப்பிலும் யாரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது சட்டத்தரணிகளே நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இதர நிர்வாகச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, தங்களை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து, காணொளி காட்சி (Video Conferencing) மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று இரு தரப்பிலும் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இன்றைய விசாரணையின் போது, காணொளி காட்சி மூலம் ஆஜராகக் கோரிய மனுவைப் பரிசீலித்த நீதிபதி, இருவரினதும் மின்னஞ்சல் முகவரிகளை (Email ID) நீதிமன்றப் பதிவேட்டில் முறையாகப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். மேலும், மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு தொடர்பான முறையான மனுக்களைத் தாக்கல் செய்யுமாறும் இரு தரப்பு சட்டத்தரணிகளுக்கும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.




