பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தியும், பல்வேறு ஊடக நிறுவனங்கள் மற்றும் செய்தி இணையதளங்களின் உத்தியோகபூர்வ லோகோக்களை (Logos) அனுமதி இன்றி சட்டவிரோதமாகப் பயன்படுத்தியும் உருவாக்கப்படும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று பிரதமரின் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு போலித் தொழில்நுட்பங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட செய்திகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களின் லோகோக்களைப் பயன்படுத்தி பரப்பப்படும் வதந்திகள்: பிரதமர் கருத்து தெரிவிப்பது போன்று எடிட் செய்யப்பட்ட போலி காணொளிகள் மற்றும் பிரதமரின் புகைப்படத்தை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட போலிப் பதிவுகள் மூலம் பின்வரும் தலைப்புகளில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன:
- பல்வேறு வணிக மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள்.
- நாட்டின் பொருளாதாரம் மற்றும் புதிய வரிக் கொள்கைகள்.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி மிகவும் நுணுக்கமாக இவ்வாறான போலிச் செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இத்தகைய வதந்திகளுக்கு ஏமாற வேண்டாம் என்றும், இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும் பிரதமரின் தனிப்பட்ட நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான போலிச் செய்திகளை உருவாக்குவதும், அவற்றைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து பரப்புவதுமான செயல்களில் ஈடுபடும் அனைத்து நபர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
– பிரதமரின் ஊடகப் பிரிவு




