கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்; இருவர் கவலைக்கிடம்!
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பதுளை நோக்கிச் சென்ற போதே, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 42 பயணிகளும் உடனடியாகப் பிரதேசவாசிகளினதும் பொலிஸாரினதும் உதவியுடன் மீட்கப்பட்டு, தியத்தலாவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர்களில் ஒருவர் மேலதிக அவசர சிகிச்சைக்காகப் பதுளை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தியத்தலாவை மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தியத்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




