களனி கங்கையில் செம்மஞ்சள் நிற வெள்ள எச்சரிக்கை! 3 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் அவசர அறிவிப்பு!
களனி கங்கையின் மேல் மற்றும் மத்திய நீரேந்துப் பகுதிகளில் தற்போது பதிவாகியுள்ள அதிக மழை காரணமாக, செம்மஞ்சள் நிற முதலாம் மட்ட வெள்ள எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது.
நிலவும் மழை வீழ்ச்சி மற்றும் ஆற்றின் நீர்மட்டப் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவாக்கை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர எச்சரிக்கையானது ஓகஸ்ட் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 7.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் மேலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் ஆற்றின் நீர்மட்டம் திடீரென அதிகரிக்கக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அந்தப் பாதைகளினூடாகப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்புடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

