பொழுதுபோக்கு நிகழ்வுகளில் இசை நிகழ்ச்சிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கூற்றுகள் முற்றிலும் தவறானவை என்றும் அவை மக்களை தவறாக வழிநடத்துபவை என்றும் பொலிஸார் ஓர் அறிக்கையில் விசேடமாக வலியுறுத்தியுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியமைக்காக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் குறித்தே இலங்கை பொலிஸார் இந்த விளக்கத்தை அளித்துள்ளனர்.
மே 31 அன்று சாவகச்சேரி, நவக்குளியில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியின் போது விடுதலைப் புலிகள் தொடர்பான பாடல்களைப் பாடியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், கிளிநொச்சி, உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் ஜூன் 2 அன்று கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர், 1979-ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 3(G) பிரிவின் கீழ் ஜூன் 3 அன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குடிமக்கள் அனைவரும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்று இலங்கை பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியதுடன், தவறான சமூக ஊடக தகவல்கள் மூலம் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.




