நாட்டிலுள்ள தாதியர் கல்லூரிகளுக்கு (Nursing Schools) 2026ஆம் ஆண்டுக்காக 3,000 பயிற்சி தாதியர்களை (Nursing Trainees) இணைத்துக் கொள்வதற்கான உத்தியோகபூர்வ விண்ணப்பங்களை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு கோரியுள்ளது.
இதற்கான இணையவழி (Online) விண்ணப்ப லிங்க் மற்றும் விபரங்கள் அடங்கிய 2026.05.29 ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானிப் பத்திரிகை (Gazette), நேற்று (ஜூன் 01) இரவு முதல் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.health.gov.lk இல் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (செய்தி மற்றும் பிரசாரம்) லக்ஷ்மேந்திர தமயந்தகுமார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைவாய்ப்புப் பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் அடிப்படைத் தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும்:
- 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (G.C.E. A/L) தோற்றியிருத்தல் வேண்டும்.
- உயிரியல் (Biology) அல்லது பௌதீகவியல் (Physics) ஆகிய பாடநெறிகளைக் கற்று சித்தியடைந்திருத்தல் அவசியம்.
- வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அனைத்து தகைமைகளையும் பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.




