யாழ்ப்பாண மண்ணிலிருந்து இலங்கை கிரிக்கெட் உலகிற்குப் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள 19 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன், தனது இரண்டாவது List A போட்டியிலேயே சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையிலான அதிரடி சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (15) நடைபெற்ற இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரின் பிரதான போட்டி சமநிலையில் (Tie) முடிவடைந்தது. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட ‘சூப்பர் ஓவர்’ (Super Over) களத்தில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சிலிர்க்க வைக்கும் திருப்புமுனை அரங்கேறியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ‘ஏ’ அணி சூப்பர் ஓவரில் 18 ஓட்டங்களைப் பெற்று, இந்தியா ‘ஏ’ அணிக்கு 19 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. இந்திய அணிக்கு வெற்றிபெற 19 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், அண்மைய ஐ.பி.எல் (IPL 2026) தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்த இந்திய ‘ஏ’ அணியின் நட்சத்திர அதிரடி துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) மற்றும் சூர்யான்ஷ் ஷெட்ஜ் ஆகியோர் களமிறங்கினர்.
இலங்கை அணியின் கேப்டன் சஹான் ஆராச்சிகே, இந்த இக்கட்டான மற்றும் கடுமையான அழுத்தங்கள் நிறைந்த இறுதி ஓவரை வீசும் பெரும் பொறுப்பை யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவரான இளம் வீரர் குகதாஸ் மதுலனிடம் ஒப்படைத்தார்.
தனது அசாத்தியமான லசித் மலிங்கா மற்றும் மதீஷ பத்திரண பாணியிலான ‘Sling-arm’ பந்துவீச்சு முறையைக் கொண்ட மதுலன், உலகத்தரம் வாய்ந்த இந்திய துடுப்பாட்ட வீரர்களைத் திணறடித்தார். சூர்யவன்ஷி போன்ற அதிரடி மன்னர்கள் களத்தில் இருந்த போதிலும், பதற்றமின்றி பந்துவீசிய மதுலன், அந்த ஓவரில் வெறும் 9 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இலங்கை ‘ஏ’ அணிக்கு மறக்க முடியாத ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.
வெறும் 19 வயதேயான குகதாஸ் மதுலன், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் வலைப் பந்துவீச்சாளராகவும் தோனியின் பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டான சூழ்நிலைகளிலும் அழுத்தங்களை எதிர்கொண்டு திறமையை நிரூபித்துள்ள இந்த யாழ்ப்பாணத்து இளைஞர், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் எதிர்காலப் பெரும் பலமாக மாறுவார் எனப் பலரும் பாராட்டி வருகின்றன




