சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தை ஈர்க்கவும் 1972 ஆம் ஆண்டு முதல் பிரகடனப்படுத்தப்பட்ட உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (05) அனுசரிக்கப்படுகிறது.
இம்முறை ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), “பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள்” என்ற மிக முக்கியமான உலகளாவிய கருப்பொருளின் கீழ் இந்நாளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான உலகளாவிய முயற்சிகளை விரைவுபடுத்துவது இம்முறை வலியுறுத்தப்படும்.
ஐக்கிய நாடுகள் யாப்பின்படி (UNFCCC), அடுத்த சில தசாப்தங்களில் பசுமை இல்ல வாயு உமிழ்வு கணிசமாகக் குறைக்கப்படாவிட்டால், இந்த நூற்றாண்டில் உலகளாவிய வெப்பநிலை 2.9 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், இதனால் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
: இலங்கையும் பருவநிலை மாற்றத்தின் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதுடன், திடீர் வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகள் மற்றும் நீர் பற்றாக்குறை போன்ற தீவிர வானிலை நிலமைகள் சாதாரணமானவையாக மாறியுள்ளன.
உலகளாவிய முயற்சிக்கு தீவிரமாகப் பங்களிக்கும் வகையில், “பருவநிலை மாற்றத்தின் பாதிப்பைக் குறைக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்ற உள்நாட்டுக் கருப்பொருளை முன்னிறுத்தி இலங்கை இம்முறை உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடுகிறது.
இதற்கமைய, சுற்றுச்சூழல் தினத் திட்டத்தின் தேசிய விழா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்தார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக இந்நாட்டில் ஏராளமான சட்டங்கள் இருந்தபோதிலும், கடந்த காலத்தில் நிலவிய அரசியல் கலாச்சாரம் காரணமாக, அச்சட்டங்களை மீறி அரசியல்வாதிகளுக்குத் தேவையானவாறு சுற்றுச்சூழல் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டதாக அமைச்சர் தம்மிக படபெந்தி சுட்டிக்காட்டினார்.
சுற்றுச்சூழலை அழிப்பதற்கான அந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்ததே கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் பெற்ற மிக முக்கிய வெற்றியாகும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.




