நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் தொடரும் மழையுடனான வானிலை! பலத்த காற்று மற்றும் மின்னல் எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானம்!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைப் பொறுப்புடன் அறிவுறுத்தியுள்ளது.



