இரத்மலானை தொழினுட்பவியல் பல்கலைக்கழகத்தில் (UoVT) கல்வி கற்கும் மாணவர்களின் நடைமுறைப் பயிற்சிக்காக நிர்மாணிக்கப்பட்ட ஊடகத் தொகுதியில், நீண்டகால குறைபாடாக இருந்த தொலைக்காட்சி (HD) கலையகம் நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் நேற்று (26) மாணவர்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இந்த அதிநவீன கலையகத்தை உத்தியோகபூர்வமாக மாணவர்களிடம் ஒப்படைத்தார்.
தொலைக்காட்சி கலையகத் திறப்பு விழாவைத் தொடர்ந்து, மாணவர்களின் கல்வி மற்றும் நடைமுறைச் செயற்பாடுகளை விரிவாக்கும் நோக்கில் பின்வரும் புதிய மையங்களும் பிரதமரால் திறந்துவைக்கப்பட்டன:
- ஒலிபரப்புக் கலையகம்: மாணவர் இணைய வானொலி அலைவரிசைகள் (Web Radio) உள்ளிட்ட கல்விச் சேவைகளை ஆரம்பிப்பதற்கான வசதி.
- செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடம் (AI Research Laboratory): நவீன தொழில்நுட்பப் பயிற்சிகளுக்கான விசேட தளம்.
- பாலினச் சமத்துவம் மற்றும் நீதி மையம் (Centre for Gender, Equity and Equality).
அண்மைக்கால வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சில பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டு, அங்குள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் தடையின்றித் தொடர்வதற்காக லேப்டாப் கணினிகளும் இதன்போது தானமாக வழங்கப்பட்டன.
2030 பசுமைக் கொள்கை (UoVT Greening Policy): தொழில்நுட்பத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் வகையில், “UoVT பசுமைக் கொள்கை” இதன்போது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, 2030 ஆம் ஆண்டளவில் பல்கலைக்கழகத்தை முற்றிலும் கார்பன்-அற்ற (Carbon-Neutral) சூழலாக மாற்றுவதற்கும், பசுமை மற்றும் நிலையான தன்மையை முதன்மைப்படுத்தும் தொழில்துறைகளில் மாணவர்கள் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ நிகழ்வுகளைத் தொடர்ந்து, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தொழினுட்பவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கே.எம்.ஜி. பிரசன்ன பிரேமதாச உட்படப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.




