சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் 3-வது பிரிவைப் பயன்படுத்திச் சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களைப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்குப் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்வதற்கான அடிப்படை நிபந்தனைகள்:
புதிய வழிகாட்டுதலின்படி, ஒருவரது பேச்சு அல்லது அறிக்கை பின்வரும் காரணிகளைக் கொண்டிருந்தால் மட்டுமே ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையை முன்னெடுக்க முடியும்:
- போரைத் தூண்டுதல்.
- பாகுபாடு, பகைமை அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுதல்.
ஒருவரைக் கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி உடனடியாகச் சட்டப் பிரிவின் பணிப்பாளருக்கு (Director of Legal Division) அது குறித்துத் தெரியப்படுத்த வேண்டும். அங்கிருந்து முறையான எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற்ற பின்னரே கைது நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, தனிநபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ பொதுச் சமூகத்தில் மனவருத்தம் ஏற்பட்டாலோ அல்லது அவமதிப்பு நிகழ்ந்தாலோ, அல்லது தெய்வ நிந்தனை (Blasphemy) இடம்பெற்றாலோ, அதனை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஐசிசிபிஆர் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் கைது செய்யக்கூடாது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளை மீறிச் செயற்படுவது அல்லது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் எச்சரித்துள்ளார்.

