வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளமையானது உலகளாவிய விவசாய உணவு அமைப்பில் கடுமையான கட்டமைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் தொடக்கமாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) எச்சரித்துள்ளது.
இது ஒரு தற்காலிக கப்பல் போக்குவரத்து தடையல்ல என்றும், அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் உலகளாவிய உணவு விலைவாசி மிகக் கடுமையான உச்சத்தை எட்ட இது வழிவகுக்கும் என்றும் அந்த அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் அதிக எரிசக்தி செலவுகள் காரணமாக, சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் மாதாந்திர விலை மாற்றங்களை கண்காணிக்கும் ‘FAO உணவு விலைக் குறியீடு’ (FAO Food Price Index) கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக உயர்வடைந்துள்ளது.
குறுகிய கால நடவடிக்கைகள்:
- வர்த்தக நடவடிக்கைகளை மாற்று நில மற்றும் கடல்வழிப் பாதைகளுக்கு உடனடியாக மாற்றுதல்.
- எரிசக்தி, உரங்கள் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நாடுகள் ஏற்றுமதி தடைகளை விதிப்பதைத் தவிர்த்தல்.
- மனிதாபிமான உணவு உதவிகளுக்கு எவ்வித வர்த்தகக் கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது.
மத்திய கால நடவடிக்கைகள்:
- விவசாயிகளின் அறுவடை காலங்களுக்கு ஏற்ப அவசரகால கடன் வசதிகளை வழங்குதல்.
- விரைவான உதவிகளை விநியோகிப்பதற்காக டிஜிட்டல் விவசாயி பதிவேடுகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல்.
- 2022 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ‘உணவு அதிர்ச்சி நிதியுதவி சாளரத்தை’ (Food Shock Window) மீண்டும் செயல்படுத்துதல்.
மேலும், உலகளாவிய ரீதியில் வறட்சி மற்றும் மழைவீழ்ச்சி மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் இந்த உணவு நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமைப் பொருளாதார நிபுணர் மெக்சிமோ டொரெரோ (Maximo Torero) எச்சரித்துள்ளார்.




