சுமார் 13,400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் அதிநவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் காந்தறை (Gandara) மீன்பிடித் துறைமுகத்தின் பணிகளை, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவு செய்து மக்களிடம் கையளிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (29) மீன்பிடி பிரதி அமைச்சர் ரத்ன கமகே, காந்தறை மீன்பிடித் துறைமுக வளாகத்திற்கு விசேட கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே இவ்விடயம் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டது. இந்த விஜயத்தின் போது, துறைமுகத் திட்டத்தின் தற்போதைய கட்டுமான முன்னேற்றங்கள் குறித்து அவர் நேரடியாகக் கண்டறிந்தார்.
துறைமுக வளாகத்தில் அப்பிரதேசத்தின் கிராமிய மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பிரதி அமைச்சர் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, மீனவர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்த அவர், மீனவ சமூகம் முன்வைத்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தளத்திலேயே வைத்து அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தெவிநுவர பிரதேச செயலகத்தில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போது, காந்தறை மீன்பிடித் துறைமுகத்திற்காக மேலதிக அலைதாங்கி (Breakwater) ஒன்றை அமைப்பது தொடர்பாக NHI நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய வரைபடம் மீனவ சமூகத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.



