இலங்கையின் ஆடைத் துறை ஏற்றுமதி வருமானம் 7.3% வீழ்ச்சி: 3,693 மில்லியன் டொலராக விரிவடைந்தது வர்த்தகப் பற்றாக்குறை என மத்திய வங்கி அறிவிப்பு!
இலங்கையின் முதன்மை ஏற்றுமதித் துறைகளில் ஒன்றான துணி மற்றும் ஆடைத் துறையின் (Textile and Garment Sector) ஏற்றுமதி வருமானம், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் துணி மற்றும் ஆடை ஏற்றுமதி மூலம் கிடைத்த வருமானம் 1,624.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் (1,751.8 மில்லியன் டொலர்கள்) 7.3 சதவீத வீழ்ச்சியாகும். உலகளாவிய சந்தை மாற்றங்களே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இக்காலப்பகுதியில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் சற்று சாதகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 4,315.6 மில்லியன் டொலர்களாக இருந்த மொத்த ஏற்றுமதி வருமானம், 2026 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 4,534.9 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
ஏற்றுமதி வருமானம் சற்று உயர்ந்த போதிலும், நாட்டின் இறக்குமதிச் செலவினம் கணிசமாக உயர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் 6,572.9 மில்லியன் டொலர்களாக இருந்த இறக்குமதிச் செலவு, 2026 இல் 8,227.9 மில்லியன் டொலர்கள் வரை பாரியளவில் அதிகரித்துள்ளது. இது 25.2 சதவீத வளர்ச்சியாகும். இதில் குறிப்பாக நுகர்வோர் பொருட்களின் இறக்குமதி 32.8 சதவீதத்தாலும், இடைநிலைப் பொருட்களின் இறக்குமதி 24.1 சதவீதத்தாலும், முதலீட்டுப் பொருட்களின் இறக்குமதி 19.8 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக, ஏற்றுமதி மூலம் கிடைத்த வருமானத்தை விட, இறக்குமதிக்கான செலவு பன்மடங்கு வேகமாக அதிகரித்தமையினால், 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) 3,693 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை கணிசமாக விரிவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை மேலும் எச்சரித்துள்ளது.




