கண்டி A-9 வீதியில் கோர விபத்து: பாடசாலை வேனுடன் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி 17 மாணவர்கள் உட்பட 18 பேர் காயம்!
கண்டி – யாழ்ப்பாணம் பிரதான A-9 வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் இன்று திங்கட்கிழமை (15) பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்தக் கோர விபத்தில் வேனில் பயணித்த 17 பாடசாலை மாணவ, மாணவிகளும் மற்றும் குறித்த வேனின் சாரதியும் பலத்த காயமடைந்த நிலையில் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் பேருந்து ஒன்று கண்டி திசை நோக்கியும், பாடசாலை மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற வேன் அதற்கு எதிர் திசையிலும் பயணித்துக்கொண்டிருந்த போதே, எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தின் தாக்கத்தினால் பாடசாலை வேனின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் கட்டுகஸ்தோட்டை பிரதேச வைத்தியசாலையிலும், மேலதிக சிகிச்சைகளுக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் கூறினர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

