டெங்கு மரணங்கள் 25 ஐ நெருங்குகிறது: மருத்துவமனைகள் நிரம்புவதால் சிகிச்சையை விட தடுப்பதே முக்கியம்! வாரத்தில் 45 நிமிடங்கள் ஒதுக்குமாறு அமைச்சர் அவசர வேண்டுகோள்!
நாடளாவிய ரீதியில் டெங்கு நோய்த்தாக்கம் பாரதூரமான நிலையை அடைந்துள்ள சூழலில், நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதை விட, இந்நோயைத் தடுப்பதே இத்தருணத்தில் எமக்குள்ள மிக முக்கியமான தேவையாகும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டச் செயலகத்தில் நேற்று (17) நடைபெற்ற, டெங்கு நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது மற்றும் ஒழிப்புத் திட்டங்களை முறைப்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் நாட்டின் தற்போதைய சுகாதார நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. தற்போது நாட்டில் பெருமளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும், நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை ஏற்கனவே 25 ஐ நெருங்கியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், நோய் பரவி வரும் வேகம் காரணமாக, வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிப்பதற்கான இடவசதியும் கொள்ளளவும் கூட எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதாக அவர் எச்சரித்தார்.
“இந்நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, வாரத்திற்கு குறைந்தது 30 அல்லது 45 நிமிடங்களாவது தாங்கள் வாழும் சூழலைச் சுத்தம் செய்ய ஒதுக்குமாறு ஒட்டுமொத்த பொதுமக்களிடமும், அனைத்து அரச மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களிடமும் நான் அன்பாய் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என அமைச்சர் தெரிவித்தார். வீடுகள், சுற்றாடல் மற்றும் அனைத்து அரச நிறுவன வளாகங்களையும் மிகுந்த அவதானத்துடன் பரிசோதித்து, கொசுக்கள் பெருகும் இடங்களை அழிப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் செயற்பாட்டு ரீதியிலான விசேட குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இக்குழுக்கள் வெறும் பெயரளவிலான குழுக்களாக மாத்திரம் சுருங்காமல், துடிப்பான திட்டங்களைத் திட்டமிடுவதற்கும் அவற்றைச் செயல்படுத்துவதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை ஏனைய மாவட்டங்களிலும் இதே முறையில் செயல்படுத்த அரசு எதிர்பார்த்துள்ளது.
இக்கலந்துரையாடலில் புத்தளம் மாவட்டச் செயலாளர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் நாயகம், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள், அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் நேரடியாகவும் ‘சூம்’ (Zoom) தொழில்நுட்பம் ஊடாகவும் இணைந்திருந்தனர்.




