அரபு நாடுகளில் முதல் முறை! 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக வலைத்தள கணக்குகள் தடை: ஐக்கிய அரபு அமீரகம் அதிரடிச் சட்டம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான விதிகளுக்கு அந்நாட்டு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. அரபு நாடொன்றில் இத்தகையதொரு கடுமையான இணையக் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டு வரப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இப்புதிய சட்டத்தின்படி, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் கடுமையான கட்டுப்பாடுகள்:
- கணக்குகள் தொடங்கத் தடை: 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் எவரும் புதிய சமூக வலைத்தளக் கணக்குகளைத் தொடங்கவோ அல்லது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கணக்குகளைப் பயன்படுத்தவோ முடியாது.
- வயது அடிப்படையிலான தரவுகள்: சிறுவர்களின் சமூக வலைத்தள பக்கங்களில் அவர்களின் வயதுக்கு ஏற்ற தகவல்கள் மற்றும் உள்ளடக்கங்கள் (Content) மட்டுமே காட்டப்பட வேண்டும்.
- அந்நியர்களுடன் பேசத் தடை: அடையாளம் தெரியாத முன்பின் அறியாத நபர்களுடன் இணையத்தில் தொடர்பு கொள்வதற்கும், உரையாடுவதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பெற்றோர் கண்காணிப்பு (Parental Control): சிறுவர்களின் மொபைல் திரை நேரம் (Screen Time) மற்றும் இணையவழிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பெற்றோர் கண்காணிப்பு வசதிகள் இச்சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
சட்டத்திற்கான பின்னணி மற்றும் அவகாசம்: கடந்த 2024ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உத்தியோகபூர்வக் கருத்துக்கணிப்பொன்றில், குழந்தைகள் தினமும் சராசரியாக 3 மணித்தியாலங்கள் வரை சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இதனால் ஏற்படும் மனரீதியான மற்றும் இணையவழிப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த புதிய தொழில்நுட்ப விதிமுறைகளைத் தங்களது செயலிகளில் நடைமுறைப்படுத்துவதற்காகச் முன்னணி சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு (Meta, TikTok, X போன்றவை) ஓராண்டு காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் சிறுவர்களின் இணையப் பாதுகாப்பிற்காக இது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையிலேயே, தற்போது ஐக்கிய அரபு அமீரகமும் இப்பட்டியலில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



