பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இந்த நாட்டிலிருந்து முழுமையாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியும், இச்சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரபல சொல்லிசைப் பாடகர் (Rapper) சங்கீத்சனை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரியும் மன்னாரில் இன்று (11) காலை மாபெரும் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளை ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம், இன்று காலை 10:00 மணியளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமானது.
போராட்டத்திற்குத் திரண்ட மக்கள் அலை: இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் மாவட்டப் பொது அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள், மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், மகளிர் அமைப்புகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பதாகைகளை ஏந்தியவாறு கலந்துகொண்டனர்.




