தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் காலகாலத்துக்கும் பேசப்படும் காவியங்களை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா (வயது 84), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (10) அதிகாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அவரது திடீர் மறைவு உலகெங்கும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களையும், ஒட்டுமொத்தத் திரையுலகினரையும் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.
முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி மற்றும் அரசு மரியாதை அறிவிப்பு: இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுச் செய்தியைக் கேட்டவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜேசப் விஜய் (C. Joseph Vijay) அவர்கள் உடனடியாக நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலுக்கு மலர்மாலை சூட்டி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற மாபெரும் கலைஞனான பாரதிராஜாவின் திரையுலகப் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், அவரது இறுதிச் சடங்குகள் ‘முழு அரசு மரியாதையுடன்’ நடத்தப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 1977 ஆம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக தடம் பதித்த பாரதிராஜா, அதுவரை ஸ்டூடியோக்களுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை கிராமத்து மண் வாசனைக்கும், எதார்த்தமான மனிதர்களுக்கும் இடையில் கொண்டு சேர்த்தார்.
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கருத்தம்மா என அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் தமிழ் சினிமாவின் மைல்கற்களாக அமைந்தன. மத்திய அரசு இவருக்கு நாட்டின் உயரிய ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாரதிராஜாவின் மறைவுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திரையுலகைச் சேர்ந்த கமல் ஹாசன், ரஜினிகாந்த், வைரமுத்து, நடிகை ரேவதி, குஷ்பூ உள்ளிட்ட பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற அவரது காந்தக் குரல் இனி ரசிகர்களின் நினைவுகளில் மட்டுமே வாழும் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.




