நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா நாளை (17) மிக விமர்சையாக நடைபெறவுள்ளது: 1008 சங்காபிஷேகமும் விசேட மங்கள வாத்தியமும் ஏற்பாடு!
மேல் மாகாணம், நீர்கொழும்பு கடற்கரை வீதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவானது நாளை (17.06.2026) புதன்கிழமை ஆலய பரிபாலன சபையினரால் மிக விமர்சையாகவும் பக்திப்பூர்வமாகவும் கொண்டாடப்படவுள்ளது.
நிகழும் பராபவ வருடம் ஆனித்திங்கள் 03ஆம் நாள் புதன்கிழமை, புனர்பூச நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுப நன்னாளில் எம்பெருமான் விநாயகப் பெருமானுக்குக் காலையில் சங்காபிஷேகம், விசேட பூசைகள், அன்னதானம் மற்றும் மாலையில் மூலஸ்தான பூசை, விசேட மேளக்கச்சேரி, வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா என்பன சிறப்பாக நடைபெறவுள்ளன.
நாளை இடம்பெறவுள்ள விசேட நிகழ்வுகளின் விபரம்:
- காலை 8.00 மணிக்கு: 1008 சங்காபிஷேகம் மிக விசேடமான முறையில் ஆரம்பமாகி நடைபெறும்.
- காலை 11.00 மணிக்கு: விசேட பூசையும், அதனைத் தொடர்ந்து அடியார்களுக்கான அன்னம் பாலித்தலும் (அன்னதானம்) இடம்பெறும்.
- மாலை 6.00 மணிக்கு: மூலஸ்தான பூசை சிறப்பாக நடைபெறும்.
- மாலை 6.30 மணிக்கு: மங்கள வாத்திய மேளக்கச்சேரி ஆரம்பமாகும்.
- இரவு 9.00 மணிக்கு: வசந்தமண்டப பூசை இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து எம்பெருமான் விநாயகப் பெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலா வந்து அடியார்களுக்குக் காட்சியளிப்பார்.
இவ்விழாவின் கோயில் மங்கள வாத்தியத்தை ஆனந்தன் குழுவினரும், விசேட மங்கள வாத்தியத்தை ஈழத்துச் சிதம்பரம் ஆஸ்தான வித்துவான் தவில் வித்துவான் N. K. வீராச்சாமி அவர்களின் புதல்வர்களான காரைநகர் கண்ணன் குழுவினரும் இணைந்து வழங்கவுள்ளனர்.
இவ்விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நீர்கொழும்பு கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் இ.ஆ.க. சொக்கநாதன் உள்ளிட்ட நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, அடியார்கள் அனைவரும் ஆசாரசீலர்களாக வருகை தந்து, தங்களால் இயன்ற அபிஷேக திரவியங்களை வழங்கி, எம்பெருமானின் பூரண அருளைப் பெறுமாறு பக்திமுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




