மகளிர் இருபதுக்கு -20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான 7ஆவது லீக் போட்டியில், பலம் வாய்ந்த நியூசிலாந்து மகளிர் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வரலாற்றுப் பதிவாக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
சவுதாம்ப்டனில் உள்ள புகழ்பெற்ற ‘தி ரோஸ் போல்’ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் (Toss) வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணி சார்பாக அதிரடியாக விளையாடிய அணித்தலைவர் மெலி கெர் மற்றும் சோஃபி டிவைன் ஆகியோர் தலா 45 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளையும், மிதாலி அயோத்யா, சுகந்திகா குமாரி, சமரி அத்தபத்து மற்றும் நிமேஷா மீபாகே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
சரிவிலிருந்து மீண்ட இலங்கை:
பின்னர் 151 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அணித்தலைவர் சமரி அத்தபத்து 27 ஓட்டங்களுடனும், விஷ்மி குணரத்ன 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, இலங்கை அணி 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து கடுமையான தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
எனினும், 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிலக்ஷிகா சில்வா மற்றும் கவிஷா தில்ஹாரி ஆகியோரின் ஜோடி 50 ஓட்டங்களை பகிர்ந்து அணியை மீட்டெடுத்தது. கவிஷா தில்ஹாரி 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
நிலக்ஷிகா – கௌஷினி அதிரடி கூட்டணி:
ஆனாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் தூணாக நின்ற நிலக்ஷிகா சில்வா அதிரடியாக 37 பந்துகளில் 54 ஓட்டங்களை (5 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார். இவருக்கு இறுதி நேரத்தில் பலத்த ஆதரவளித்த விக்கெட் காப்பாளர் கௌஷினி நுத்யங்கனா 14 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடங்கலாக 24 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.
இவர்களின் அதிரடி ஆட்டத்தின் மூலம், இலங்கை மகளிர் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று, 5 விக்கெட்டுகளால் மாபெரும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. நியூசிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் நென்சி படேல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




