மேல் மாகாண ஆளுநர் பதவியிலிருந்து தான் விலக விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாக ஆளுநர் ஹனிப் யூசுப் உத்தியோகபூர்வமாக விளக்கியுள்ளார். அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகளுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாண ஆளுநர் கடமைகளுக்கு மேலதிகமாக, வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவர் (Special Envoy for Foreign Direct Investment) என்ற பொறுப்பையும் அவர் கவனித்து வருகின்றார். இந்த இரு முக்கிய பதவிகளுடனும், தனது குடும்பப் பொறுப்புகளையும் சமநிலைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாகவே இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படும் வரை நிர்வாகப் பணிகள் தடையின்றி சீராக நடப்பதை உறுதி செய்யும் பொருட்டு, தற்காலிகமாகப் பதவியில் நீடிக்குமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதற்கமைய, தகுதியான அடுத்த ஆளுநர் அடையாளம் காணப்படும் வரை அவர் மேல் மாகாண ஆளுநராகத் தொடர்ந்து கடமையாற்றுவார். அதன் பின்னர், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் ஜனாதிபதியின் விசேட தூதுவர் என்ற கௌரவப் பதவியில் மாத்திரம் தொடர்ந்து நீடித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்க எதிர்பார்ப்பதாக ஹனிப் யூசுப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

