மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி (Lodge) ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் சிக்கி 3 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று (27) பிற்பகல் அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன், தீப்பரவலின் போது வெளியான கடுமையான நச்சுப் புகையை சுவாசித்தமையினாலேயே அறையில் தங்கியிருந்த இரண்டு சிறுவர்களும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பிள்ளைகளின் தாய் மட்டக்களப்பில் உள்ள போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக, பிள்ளைகளின் தந்தை தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பதுளையிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கியிருந்த நிலையில், பிள்ளைகள் இருவரையும் அறையிலேயே இருக்கச் செய்துவிட்டு தந்தை ஏதோ ஒரு தேவைக்காக வெளியில் சென்றுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்திலேயே அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
- 3 வயதுடைய ஆண் பிள்ளை
- 5 வயதுடைய பெண் பிள்ளை
தந்தை வெளியில் சென்றிருந்த சில நிமிடங்களில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் தீ விபத்துக்கான துல்லியமான காரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.




