“இதற்கு நான் பொறுப்பேற்க வேண்டும், யார் மீதும் பழி சுமத்த விரும்பவில்லை!” – நீர்கொழும்பு சிறை கொடூரத்திற்குப் பொறுப்பேற்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உருக்கமான அறிக்கை!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பாரிய வன்முறை மற்றும் அதன் விளைவாக நேர்ந்த கொடூர உயிர் இழப்புகள் குறித்து நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தனது ஆழ்ந்த அதிர்ச்சியையும் கவலையையும் வெளியிட்டுள்ளதுடன், இச்சம்பவத்திற்குத் தானே முழுப் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார்.
இன்று (06) விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இச்சம்பவத்திற்கு அந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் தான் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். சிறைச்சாலையின் நிலைமை தற்போது பாதுகாப்புப் பிரிவினரால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், ஏற்பட்டுள்ள மனித உயிர்களின் இழப்பை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என அவர் மிகவும் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த நீதி அமைச்சர், இச்சம்பவத்திற்கான பின்னணி மற்றும் சதித் திட்டம் குறித்து முழுமையான புலனாய்வு விசாரணைகள் நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார். இனிவரும் காலங்களில் இவ்வாறானதொரு அசம்பாவிதம் நாட்டின் எந்தவொரு சிறைச்சாலையிலும் மீண்டும் நிகழாதிருக்கத் தேவையான அனைத்து கடுமையான கட்டமைப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், “யாரோ ஒருவர் மீது பழி சுமத்துவதை விட, தவறு எங்கு நடந்தது என்பதைக் கண்டறிந்து அதனைத் தடுப்பதே எனது முதன்மை நோக்கம்” என்றும் அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மிகவும் உறுதியாக வலியுறுத்தினார்.




