திருகோணமலை மாவட்டச் செயலக வளாகத்தில் நீண்டகாலமாகக் குறுகிய இடவசதியில் இயங்கி வரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய இருமாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (09) மாவட்டச் செயலகக் கட்டடத் தொகுதியின் வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோரின் நேரடி வழிகாட்டுதலுக்கு இணங்க, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் உலக வங்கியின் (World Bank) நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கும் இத்திட்டத்தின் கீழ், புதிய இருமாடிக் கட்டட வசதிகள் மற்றும் நவீன அலுவலக தொழில்நுட்ப உபகரணங்கள் உள்ளிட்ட அத்தனை தேவைகளுக்காகவும் ரூபாய் 60 மில்லியன் (6 கோடி) நிதி உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டச் செயலகக் கட்டடத் தொகுதியின் மற்றொரு பகுதியில் அமையவுள்ள இக்கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் இவ்வருட இறுதிக்குள் (2026) முழுமையாக நிறைவு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து மாவட்டங்களில் புதிய கட்டடங்கள்: உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இம்மாபெரும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தைத் தவிர, பதுளை, காலி, கிளிநொச்சி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் இதேபோன்ற நவீன வசதிகளுடன் கூடிய ஐந்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகத் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் அவசர கால அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீட்புச் சேவைகளைத் தாமதமின்றி, மேலும் விரிவாகவும் திறம்படவும் முன்னெடுக்க முடியும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாசன் சுகுணதாஸ் இங்கு கருத்து வெளியிட்டபோது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் றியாத், மாவட்ட கணக்காளர் ஏ.எல்.பிரசாத் விஜேசிங்க, மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய மற்றும் அரச துறைசார்ந்த முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது




