லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகநாந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணொளி வாயிலாக சாட்சியமளிப்பதற்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று யாழ்ப்பாணத்தில் வைத்து இந்த இரு சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், அவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவின் (Habeas Corpus) அடிப்படையில் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டின் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றம் முன்னதாகவே அழைப்பாணை அனுப்பியிருந்தது. அவரும் தான் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் முன்னதாக உறுதிமொழி வழங்கியிருந்தார்.
எனினும், தற்போது நிலவும் பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி தம்மால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது என கோட்டாபய ராஜபக்ஷ தரப்பால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே, தற்போது காணொளி வாயிலாக சாட்சியமளிக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.




