அமைச்சர்கள், அரச அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கம்! நிதியமைச்சு வெளியிட்ட புதிய சுற்றறிக்கை!
ஆற்றல் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு எரிபொருள் விநியோகத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக அரசாங்கத்தின் செலவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவைக் கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி அரசாங்கம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, மார்ச் முதலாம் திகதி நிலவிய எரிபொருள் விலையின் அடிப்படையில் மட்டுமே கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்தது.
எவ்வாறாயினும், தற்போதைய புதிய சுற்றறிக்கையின் மூலம் அந்த பழைய கட்டுப்பாட்டுச் சுற்றறிக்கை முற்றாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு தற்போதைய எரிபொருள் விலையின் (Current Market Price) அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புதிய சுற்றறிக்கையை நிதியமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண முதன்மைச் செயலாளர்கள், ஆணைக்குழுக்களின் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து துறைசார் தலைவர்களுக்கும் அவசரமாக அனுப்பி வைத்துள்ளார்.




