களுவாஞ்சிக்குடியில் ரூ. 29.5 மில்லியனில் நவீன தபால் நிலையம்! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைத்தார்!
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட முதலாம் தர தபால் நிலையக் கட்டடம் (25) முற்பகல் மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் 18 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு, வெறும் 10 மாதங்களுக்குள் இதன் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவுசெய்யப்பட்டு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழாவில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், இக்கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை தபால் திணைக்களம் ரூ. 29.5 மில்லியனைச் செலவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதுவரை பல்வேறு இடங்களில் வாடகை அடிப்படையில் இயங்கி வந்த களுவாஞ்சிக்குடி தபால் நிலையத்திற்கு இந்நவீனக் கட்டடம் கிடைத்ததன் மூலம், அப்பிரதேச மக்கள் திறமையான, தரமான மற்றும் நம்பகமான தபால் மற்றும் நிதிச் சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
கடந்த ஆண்டு புதிய தபால் நிலையங்களை நிர்மாணிப்பதற்காக ரூ. 600 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன், அந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 14 புதிய தபால் நிலையங்களும் உப தபால் நிலையங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலும், தபால் நிலையங்களை நவீனமயப்படுத்துவதற்காக மேலும் ரூ. 600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் நாடு முழுவதும் 206 தபால் நிலையங்களில் நவீனமயப்படுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் நினைவுகூர்ந்தார்.
களுவாஞ்சிக்குடி தபால் நிலையம் மூலம் 9,671 குடும்பங்களுக்கு நேரடியாகச் சேவைகள் வழங்கப்படுகின்றன. அதற்கு மேலாக, அரச நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கும் தினசரி சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், 07 உப தபால் நிலையங்கள் இத்தபால் நிலையத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் 21 தபால் நிலையங்களில் களுவாஞ்சிக்குடி தபால் நிலையம், மாவட்டத்தின் முதலாம் தர தபால் நிலையமாக விரிவான சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, களுவாஞ்சிக்குடி பிரதேச சபையின் தலைவர் மேகசுந்தரம் வினோராஜ், தபால்மா அதிபர் ருவன் சத்குமார, பிரதித் தபால்மா அதிபர்களான துசித ஹுலங்கம, எஸ். பிரகாஷ், மட்டக்களப்பு பிராந்திய தபால் அத்தியட்சகர் திருபாலனி அருள்செல்வம், களுவாஞ்சிக்குடி தபால் நிலையப் பொறுப்பதிகாரி எஸ். குகதாசன் உள்ளிட்ட தபால் துறை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.




