இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 383 வேலைவாய்ப்புகள்! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு!
இலங்கை பொலிஸ் துணைச் சேவையில் (Police Auxiliary Service) காலியாகவுள்ள 383 பணியிடங்களை நிரப்புவதற்காக, விரிவான தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் துறைகளில் தகுதியான இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பணியிடங்களின் விபரம்: 2026 ஜூலை 10 ஆம் திகதியிடப்பட்ட 2497 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக:
- உப பொலிஸ் பரிசோதகர் (Sub-Inspector): 177 பணியிடங்கள்
- பொலிஸ் கொன்ஸ்டபிள் (Police Constable): 206 பணியிடங்கள்
இணையதள தொகுப்பு மற்றும் வடிவமைப்பு (Website Editing & Development), முறைமை பகுப்பாய்வு (Systems Analysis), நிரலாக்கம் (Programming), கணினி வன்பொருள் மற்றும் வலையமைப்பு (Hardware & Networking), கிராபிக் டிசைனிங், கணிய அளவையியல் (Quantity Surveying), மெக்கானிக், உணவகப் பராமரிப்பு (Catering) மற்றும் திட்டமிடல் (Planning) ஆகிய துறைகளில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேலும், மருந்தாளர்கள் (Pharmacists), மின்சார திட்ட வரைவாளர்கள், மருத்துவ பரிசோதனைக்கூட தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் செவிலியர்கள் (Nurses) ஆகிய பதவிகளுக்கு ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்க முடியும்.
குளிரூட்டல் மற்றும் குளிர்சாதன தொழில்நுட்ப வல்லுநர்கள், சாரதிகள், எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள், மெக்கானிக்குகள், கணினி இயக்குநர்கள், வெல்டர்கள், ஒலி அமைப்பு இயக்குநர்கள் மற்றும் மேடை வெளிச்ச தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகிய தொழில்நுட்பப் பணியிடங்கள் இதில் அடங்குகின்றன. அத்துடன், மேக்கப் கலைஞர்கள் (Makeup Artists) மற்றும் உடற்பயிற்சி பயிற்றுநர்கள் (Fitness Instructors) ஆகிய பதவிகளுக்கு ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை & இறுதித் திகதி: விண்ணப்பங்கள் எதிர்வரும் 2026 ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் உத்தியோகபூர்வ இணையவழி விண்ணப்பக் கட்டமைப்பு (Online Application System) மூலமாக மட்டுமே தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஓகஸ்ட் 14 ஆம் திகதிக்கு முன்னதாகத் தகுதியுடைய நபர்களுக்கு இத்தகவலைத் தெரிவித்து விண்ணப்பிக்க வைக்குமாறு இலங்கை பொலிஸ் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.



