வெறும் மருத்துவ நிபுணர்களை மாத்திரம் உருவாக்காமல், நோயாளிகளின் வலிகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயலாற்றக்கூடிய சகானுபூதி (Empathy) மற்றும் மனிதநேயமிக்க மருத்துவர்களை உருவாக்கக்கூடிய புதியதொரு முகம் நாட்டின் மருத்துவக் கல்விக்கு அவசியமானது என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் மருத்துவக் கல்வி பற்றிக் கலந்துரையாடுவதற்கும், அதற்கான தேசியக் கொள்கையொன்றைத் தயாரிப்பதற்கும் என நியமிக்கப்பட்ட விசேட மருத்துவ நிபுணர் குழுவின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இக்கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் கல்வி அமைச்சில் நடைபெற்றது.
தேசிய சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மருத்துவக் கல்வியை வலுப்படுத்துவதன் மூலோபாய முக்கியத்துவத்தை இனங்கண்டு இந்த தேசியக் கொள்கை தயாரிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது:
- இலங்கையின் தற்போதைய மருத்துவக் கல்வித் துறையில் உடனடியாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பகுதிகளை அடையாளம் காணுதல்.
- மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ மாணவர்கள் எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சினைகளுக்கான முறையான தீர்வுத் திட்டங்களை முன்வைத்தல்.
இந்த விசேட நிபுணர் குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்கள், இலங்கையின் எதிர்கால மருத்துவத் துறைக்கும், ஒட்டுமொத்த பொதுமக்களின் நல்வாழ்விற்கும் நேரடியாகப் பங்களிப்பு செய்யக்கூடிய மிகவும் பாரதூரமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமையும் என பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.




