2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (Grade 5 Scholarship Exam) தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறியமை ஊடாக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலகவிற்கு 6 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் இன்று (14) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட தரப்பினரால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பரீட்சை நடைமுறைகள் மற்றும் மறுசீரமைப்புகள் தொடர்பாகத் தேசிய கல்வி நிறுவனத்திற்குச் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.
எனினும், உயர் நீதிமன்றம் வழங்கிய அந்த கட்டளைகளை வேண்டுமென்றே மீறி, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக ஐ.ஜி.எஸ். பிரேமதிலகவிற்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பை இன்று அறிவித்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு, குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பணிப்பாளர் குற்றவாளி எனத் தீர்மானித்து, அவருக்கு இந்த 6 வருட கடூழியச் சிறைத்தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கல்வித்துறையின் உயர்மட்ட அதிகாரி ஒருவருக்கு இத்தகைய கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


