ஆர்ஜன்டீனா போட்டி அதிகாரிகளை உலகக் கிண்ணத்தில் இருந்து நீக்க எகிப்து கோரிக்கை! பிரான்ஸ் நடுவருக்கு எதிராக பிஃபாவிடம் விசேட புகார்!
ஆர்ஜன்டீனாவுக்கு எதிரான தனது 16 அணிகள் சுற்றில் பணியாற்றிய போட்டி அதிகாரிகளை உலகக் கிண்ணத் தொடரில் இருந்து உடனடியாக நீக்குமாறு சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் (FIFA) எகிப்து உத்தியோகபூர்வமாகக் கோரியுள்ளது.
அட்லாண்டாவில் நடந்த இந்தப் போட்டியில் மத்தியஸ்தர்கள் இரட்டை நிலைப்பாட்டைக் காண்பித்ததாகக் குறிப்பிட்டுள்ள எகிப்து கால்பந்து சம்மேளனம், இது குறித்து முழுமையான விசாரணை ஒன்றை நடத்தும்படி பிஃபாவை வலியுறுத்தியுள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்திய நடுவர்களின் தீர்ப்புகள்: போட்டியின் இரண்டாவது பாதியில் எகிப்து 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, வீடியோ உதவி நடுவர் (VAR) ஆய்வுக்குப் பின்னர் மொஸ்தபா ஸிகோ அடித்த கோல் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. கோல் பெறும் தருணத்தில் எகிப்தின் மத்தியகள வீரர் மர்வான் அத்தியா, ஆர்ஜன்டீனாவின் லிசாண்ட்ரோ மார்டினஸின் காலை மிதித்ததாக நடுவர் தீர்ப்பளித்திருந்தார்.
அதேபோன்று, ஆர்ஜன்டீனாவின் பெனால்டி பகுதியில் வைத்து எகிப்தின் நட்சத்திர வீரர் மொஹமட் சலா மீது எதிரணியினர் முறையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் அதற்கு நடுவர்கள் உரிய தீர்ப்பை வழங்கவில்லை என எகிப்து குற்றம்சாட்டுகிறது.
ஏமாற்றத்துடன் வெளியேறிய எகிப்து: இவ்வாறான பின்னடைவுகளுக்கு மத்தியில், ஆர்ஜன்டீனா அணி ஆட்டத்தின் கடைசி நேரத்தில் பெற்ற கோல்களினால் 3–2 என வெற்றியீட்டி காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.
போட்டி நடுவர் குழு செய்த மோசமான தவறுகள் மற்றும் இரட்டை நிலைப்பாடான தீர்ப்புகள் காரணமாகவே எகிப்து அணி உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற நேர்ந்ததாகக் கூறி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முக்கிய நடுவரான பிரான்கொயிஸ் லெடெக்சியருக்கு எதிராக விசாரணை நடத்தும்படி எகிப்து கால்பந்து சம்மேளனம் வெளியிட்டிருக்கும் உத்தியோகபூர்வ அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



