ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்: குவைத் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடல்!
ஈரான் நடத்திய திடீர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் (Kuwait International Airport) விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் செயற்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டதன் காரணமாக, குவைத்தின் உத்தியோகபூர்வ தேசிய விமானச் சேவையான ‘குவைத் எயார்வேஸ்’ (Kuwait Airways) தங்களது பெரும்பாலான சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் பயணங்களின் நேரங்களை அவசரமாக மாற்றியமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு அவசர வேண்டுகோள்: திடீரென ஏற்பட்டுள்ள இந்த வான்வெளிப் பதற்றம் காரணமாக, பயணிகள் தங்களது விமானப் பயணங்களின் புதிய நேரங்கள் மற்றும் விமான நிலையத்தின் தற்போதைய நிலை குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு குவைத் எயார்வேஸ் நிறுவனம் உத்தியோகபூர்வமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் தத்தமது விமான அட்டவணைகளை இணையத்தளம் ஊடாகவோ அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்துடனோ தொடர்புகொண்டு உறுதிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த போர் பதற்றம் காரணமாக வான்வழிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து குவைத் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.




