டிரம்பின் வரலாற்று ஒப்பந்தம் சில மணி நேரங்களிலேயே பலன் தந்தது! ஹோர்முஸ் நீரிணையை அதிரடியாகக் கடந்த 12.5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்: வெள்ளை மாளிகை அறிவிப்பு!
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை மிகக் கடுமையாகப் பாதித்திருந்த மத்திய கிழக்கு பிராந்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் தரப்புக்கு இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களிலேயே, சுமார் 12.5 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) சந்தி ஊடாகப் பாதுகாப்பாகக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் (JD Vance) வௌ்ளை மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பை உத்தேசமாக வௌியிட்டுள்ளார். முன்னதாக, சுமார் 6 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யைத் தாங்கிய சவூதி அரேபியக் கொடியுடன் கூடிய மூன்று பிரம்மாண்ட கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை ஊடாகக் கடந்ததாகத் தகவல்கள் வௌியாகியிருந்த சூழலில், உப ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு சர்வதேச சந்தைக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
தற்போது எட்டப்பட்டுள்ள இந்த மிக முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தமானது, கடந்த இரண்டு மாதங்களாக முடங்கிக் கிடந்த ஹோர்முஸ் நீரிணையை உடனடியாக வணிகப் போக்குவரத்திற்காகத் திறப்பதற்கும், ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த கடுமையான கடல்வழி முற்றுகையை முழுமையாக நீக்குவதற்கும் வழிவகை செய்கிறது.
கடல்வழியில் பாதுகாப்பான பாதையை உறுதி செய்வதற்கும், போரின் போது நடப்பட்ட கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றுவதற்கும் இன்னும் சில நாட்கள் அவகாசம் தேவைப்படுவதால், நீரிணை வழியேயான கப்பல் போக்குவரத்து போருக்கு முந்தைய முழுமையான நிலையை அடைய இன்னும் சற்று காலம் எடுக்கும் என்று சர்வதேச கப்பல் நிறுவனங்கள் கூறியுள்ளன. எனினும், இந்த ஒப்பந்தத்தின் சாதகமான தாக்கம் உலகளாவிய எரிசக்தி சந்தையில் உடனடியாகத் தெரியத் தொடங்கியுள்ளது.
எவ்வாறாயினும், போரினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து தவிக்கும் லெபனானில், இஸ்ரேலியப் படைகள் இன்றும் கொடூரமான புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இஸ்ரேலின் இந்தத் தொடர் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்போது எட்டப்பட்டுள்ள இந்த அமைதிப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பாதிப்பு அல்லது பின்னடைவு ஏற்படக் கூடிய புதிய அபாய நிலை காணப்படுவதாக சர்வதேச அரசியல் வினையாளர்கள் எச்சரித்துள்ளனர்.



