வொஷிங்டனில் ஈரானிய ட்ரோன் என அழைக்கப்பட்ட ஒன்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மீது ஈரான் அண்மையில் வான்வழித் தாக்குதலை நடத்தியிருந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஒப்புதலுக்கு உட்பட்டு, தங்களது போர்நிறுத்தத்தை நீடிப்பதற்கான ஆரம்பக்கட்ட உடன்பாட்டை அமெரிக்காவும் ஈரானும் இன்று வியாழக்கிழமை (28) எட்டியுள்ளன.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
- இரு தரப்பும் தற்காலிக போர்நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீடிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிற்கு சம்மதித்துள்ளதாக ரொயிட்டர்ஸ் (Reuters) செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
- இந்த 60 நாட்கள் காலப்பகுதியில் ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டம் குறித்த மிக முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த உத்தேச திட்டத்திற்கு இன்னும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இறுதி அங்கீகாரம் தேவைப்படுகிறது. இந்தச் செய்தி முதன்முதலில் ‘அக்சியோஸ்’ (Axios) ஊடகத்தால் விசேட அறிக்கையாக வெளியிடப்பட்டது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தணிந்து, அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் (Crude Oil) விலைகள் தங்களது ஏறுமுகப் போக்கை மாற்றி, திடீர் சரிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.




