தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்! இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை கடந்த 03.07.2026 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 23.07.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலை (Online) ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான அறிவுறுத்தல்கள்:
- பாடசாலை விண்ணப்பதாரிகள்: தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு விண்ணப்ப ஒழுங்குமுறைகளை மேற்கொள்வதற்கான விசேட அறிவுறுத்தல்கள் அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
- தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் (Private Candidates): தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள், தமது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் உரிய இறுதித் திகதிக்கு முன்னர் அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்ளாமை பரீட்சைக்கு விண்ணப்பிப்பதில் எவ்விதத் தடையையும் ஏற்படுத்தாது என்பதைப் பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது: திணைக்களத்தின் ஊடக வெளியீட்டுக்கு அமைய, அனைத்து விண்ணப்பதாரிகளும் வரும் 23.07.2026 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க முடியும். அதேவேளை, எவ்வித காரணங்களுக்காகவும் விண்ணப்பத்திற்கான இறுதித்திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.




