செப்டெம்பரில் மக்கள் வசமாகும் கொழும்பு ‘ஸ்டேடியம்கம’ 1,000 அடுக்குமாடி வீட்டுத் தொகுதி! பிரதி அமைச்சர் எரங்க குணசேகர நேரில் ஆய்வு!
கொழும்பு 14, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள, 1,000 வீடுகளைக் கொண்ட ‘ஸ்டேடியம்கம’ (Stadiumgama) மாபெரும் புதிய அடுக்குமாடி வீட்டுத் தொகுதி எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், நகர்ப்புற அபிவிருத்தி அதிகார சபையினால் (UDA) முன்னெடுக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், பயனாளிகளிடம் வீடுகள் கையளிக்கப்படுவதற்கு முன்னர் அங்குள்ள அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு நிலவரங்களைக் கண்டறிவதற்காக, நகர்ப்புற அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர நேற்று (16) குறித்த வீட்டுத் தொகுதி வளாகத்திற்கு நேரில் விஜயம் செய்து விசேட கள ஆய்வொன்றை மேற்கொண்டார்.
இதன்போது, வீடுகளின் தரம், குடிநீர், மின்சாரம் மற்றும் இதர அடிப்படைத் தேவைகள் அனைத்தும் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து அவர் விரிவாக ஆராய்ந்ததுடன், அதிகாரிகளுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.




