ஐ.தே.கவிலிருந்து விலகி ‘சர்வஜன பலய’வில் இணைந்தார் கலாநிதி சமிந்த மலலசேகர! இரு முக்கிய பதவிகள் வழங்கி வைப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளர் கலாநிதி சமிந்த மலலசேகர, இன்று (21) ‘சர்வஜன பலய’ (சர்வஜன அதிகாரம்) அரசியல் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளார்.
இத்தகவலைக் கட்சியின் ஊடகப் பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வஜன பலய கட்சியில் இணைந்ததனைத் தொடர்ந்து, அவர் செங்கடகல தொகுதிக்கான சர்வஜன பலய அமைப்பாளராகவும், சர்வஜன தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தைச் சர்வஜன பலய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர, சர்வஜன பலய கட்சியின் தலைமையகத்தில் வைத்து அவருக்கு வழங்கி வைத்தார்.
சர்வஜன பலய தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த விசேட நிகழ்வில், கட்சியின் தேசிய அமைப்பாளரும் கண்டி மாவட்டத் தலைவருமான திலும் அமுனுகம மற்றும் கட்சியின் உப தலைவரும் இரத்தினபுரி மாவட்டத் தலைவருமான காமினி வலேபொட உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கண்டி மாவட்டத்தின் முக்கிய தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட கலாநிதி சமிந்த மலலசேகரவின் இந்தச் சேர்க்கை, கண்டி அரசியல் களத்தில் சர்வஜன பலய கட்சிக்குப் புதிய பலத்தைச் சேர்க்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.




