பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய பிரதான பாதை திருவிழாக் காலத்தில் திறப்பு! பலாலி கிழக்கு காணிகளை விடுவிக்கவும் இராணுவம் இணக்கம்!
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து விடுமாறு அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கைக்குத் தற்போதைய அரசாங்கத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் விசேட பணிப்புரைக்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் தோழர் க. இளங்குமரன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியை நேரில் சந்தித்து, இது தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
பாதுகாப்பு காரணங்களால் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த பிரதான பாதை, ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா நடைபெறும் காலப்பகுதியில் தினமும் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது என்று இச்சந்திப்பின் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் காலங்களில் குறித்த பாதையை முழுமையாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிரந்தரமாகத் திறப்பதற்கும் இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இக்கலந்துரையாடலின் போது பலாலி கிழக்கு பகுதி மக்களின் நீண்டகாலப் பிரச்சினையான அவர்களின் பூர்வீகக் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. அந்த விடயத்திலும் சாதகமான பல முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.




