ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று (24) செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு பகுதியாக, ஈரானுக்கு மிகவும் முக்கியமான ஒரு சலுகையை வழங்கியுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். எனினும், அந்தச் சலுகை என்ன என்பது குறித்த விபரங்களை அவர் பகிரங்கப்படுத்தவில்லை.
அமெரிக்கா ஈரானுக்கு 15 அம்சங்கள் அடங்கிய விரிவான தீர்வுத் திட்டம் (15-point settlement plan) ஒன்றை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பகைமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இந்த ஒப்பந்தத்தை எட்டுவதற்காக, ஈரானில் உள்ள சரியான நபர்களுடன் (Right people) அமெரிக்கா பேசி வருவதாக ஜனாதிபதி ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானியர்கள் ஒரு நிரந்தரமான ஒப்பந்தத்தை எட்ட மிகவும் விரும்புவதாகத் தெரிவித்த ட்ரம்ப், பேச்சுவார்த்தைகள் சாதகமான திசையில் நகர்ந்து வருவதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஹோர்முஸ் நீரிணை விவகாரம் மற்றும் எரிசக்தி மையங்கள் மீதான அச்சுறுத்தல்கள் நிலவி வந்த சூழலில், ட்ரம்பின் இந்த அறிவிப்பு உலகளாவிய பதற்றத்தை சற்று தணித்துள்ளது.

