அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘TruthSocial’ தளத்தில் வெளியிட்டுள்ள அதிரடியான பதிவு, மத்திய கிழக்கில் ஒரு பாரிய உலகப்போர் மூளும் அபாயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க நேரப்படி இன்று இரவு ஈரானுக்கு மிகவும் தீர்மானமிக்க ஒரு இரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ள பதிவில், “அமெரிக்க நேரப்படி இன்றைய இரவு ஒரு முழு நாகரிகத்தினதும் முடிவாக அமையக்கூடும்” என மிகவும் எச்சரிக்கையான தொனியில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு ஒரு பேரழிவு நடப்பதை தான் விரும்பவில்லை என்றாலும், தற்போதைய சூழலில் அது பெரும்பாலும் நிகழவே வாய்ப்புள்ளதாக அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரான் தரப்பில் தீவிரத்தன்மை குறைந்த மற்றும் புத்திசாலித்தனமான மனப்பாங்கு இருக்கும் பட்சத்தில், ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்படக்கூடும் என்றும், போர் தவிர்க்கப்படலாம் என்றும் அவர் தனது பதிவில் ஒரு மெல்லிய நம்பிக்கையைச் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றில் இன்றைய இரவு மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக அமையும் என அவர் எச்சரித்துள்ளார்.
உலக எரிசக்திப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்காக ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய 48 மணிநேரக் கால அவகாசம், அமெரிக்க நேரப்படி இன்று இரவு 8.00 மணியுடன் நிறைவடைய உள்ளது. இந்த காலக்கெடுவிற்குள் ஈரான் இணங்கி வராவிட்டால், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் இராணுவ உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா பாரிய தாக்குதலை நடத்தும் என அஞ்சப்படுகிறது.
தற்போது அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்கள் பாரிய தாக்குதலுக்குத் தயார் நிலையில் உள்ளதாகப் பென்டகன் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகமே இந்த நள்ளிரவை மிகுந்த அச்சத்துடன் எதிர்நோக்கியுள்ளது.


