அமெரிக்காவுடனான 5 வார காலப் போரில் ஈரான் ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளதாக ஈரானிய சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த ஜனவரி மாதம் 26-ஆம் திகதி வெளியிட்ட ஒரு கருத்து இப்போது உண்மையாகியுள்ளதாக ஈரானிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 26 அன்று உரையாற்றிய அயதுல்லா அலி கமேனி, “எதிரியை நாம் மண்டியிட வைப்போம்” (We will make the enemy kneel) என்ற நம்பிக்கையான கருத்தை வெளியிட்டிருந்தார். தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் 10 அம்ச அமைதித் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளமை கமேனியின் அந்த தீர்க்கதரிசனத்திற்கு கிடைத்த வெற்றியாக ஈரான் தரப்பில் பார்க்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு ட்ரம்ப் வழங்கிய 48 மணிநேரக் கெடு இன்றுடன் முடிவடைந்தது. “இன்று இரவு ஒரு நாகரிகத்தின் முடிவாக இருக்கலாம்” என ட்ரம்ப் எச்சரித்திருந்த போதிலும், கடைசி நிமிடத்தில் ஈரானின் 10 அம்ச அமைதித் திட்டத்தை (10-point proposal) ஒரு “ஆக்கபூர்வமான அடிப்படை” (Workable basis) என ஏற்றுக்கொண்டுள்ளார். பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
- 2 வார போர்நிறுத்தம்: இரு நாடுகளும் அடுத்த 14 நாட்களுக்குத் தாக்குதல்களை நிறுத்தி வைக்கும்.
- ஹோர்முஸ் நீரிணை திறப்பு: உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்காக ஹோர்முஸ் நீரிணை தற்காலிகமாகத் திறந்துவிடப்படும்.
- பேச்சுவார்த்தை: எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இரு தரப்பினருக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும்.
[Image: Iranians celebrating at Enqelab Square in Tehran holding posters of Ali Khamenei after ceasefire announcement]
ஈரானிய தேசிய பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிரி தனது கோழைத்தனமான போரில் ஒரு முற்றுப்புள்ளி காண முடியாத தோல்வியைத் தழுவியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது. எனினும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இதனை ஒரு “முழுமையான வெற்றி” எனத் தனது தரப்பிலிருந்து வர்ணித்துள்ளார்.



