யாழ்ப்பாணம், கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் இன்று (2026 ஜனவரி 14) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற 237 பறவைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகும், அதில் பயணித்த மூன்று சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தின் கீழ் இயங்கும் கச்சத்தீவிலுள்ள கடற்படைப் பிரிவு, தீவைச் சுற்றிய கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகை அவதானித்ததையடுத்து, வடக்கு கடற்படை கட்டளையினரால் இந்த சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது, குறித்த டிங்கி படகின் மூலம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வர முயன்றதாகக் கூறப்படும் 237 புறாக்கள், மூன்று சந்தேகநபர்கள், மற்றும் டிங்கி படகு ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட சந்தேகநபர்கள் 25 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக, சந்தேகநபர்கள், டிங்கி படகு மற்றும் பறவைகள் ஆகியவற்றை நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

