தலங்கம அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் இன்று (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இக்கொலைத் திட்டம் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நவகமுவ பகுதியைச் சேர்ந்த நதுன் கவிஷ (20) மற்றும் சனோஜ் கோகில (24) ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர், கொட்டாவையில் வைத்து இவர்கள் பயணித்த காரை வழிமறித்து இந்த அதிரடி கைதை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குற்றவாளிகளான “டுடூ” (தரிந்து மதுசங்க) மற்றும் “மோதர நிபுண” ஆகியோரின் நேரடி வழிகாட்டலில் இயங்கி வந்தமை தெரியவந்துள்ளது.
- ஒப்படைக்கப்பட்ட பணி: “சுத்தா ஐயாவின் முக்கிய வேலை ஒன்று உள்ளது, அதனைச் செய்ய வேண்டும்” என வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவின் பேரில், இவர்கள் கொட்டாவையில் ஒரு காரை ஒரு வாரத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர்.
- ஆயுத விநியோகம்: கொட்டிகாவத்தை பகுதியில் முச்சக்கர வண்டியில் வந்த ஒருவரிடமிருந்து துப்பாக்கி அடங்கிய பொதியைப் பெற்று, அதனைச் சம்பவத்தன்று அக்குரேகொட பகுதியில் மற்றொரு காருக்கு மாற்றியுள்ளனர்.


