சர்வதேசக் கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) ஏவுகணைத் தாக்குதல் மூலம் ஈரானியக் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிரடியாக அறிவித்துள்ளார். எனினும், தாக்குதலுக்கு உள்ளான கப்பலின் பெயரை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
இதேவேளை, ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பல் இன்று (04) அதிகாலை இலங்கைக்கு தெற்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாலை வேளையில் குறித்த கப்பலில் இருந்து விடுக்கப்பட்ட அவசர உதவிக் கோரிக்கையைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினர் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
விபத்து நிகழும் போது அந்தக் கப்பலில் சுமார் 180 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 32 பேர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், கப்பலில் இருந்த ஏனைய 140 க்கும் மேற்பட்டோரின் நிலை இதுவரை அறியப்படவில்லை எனவும், அவர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களைத் தேடும் பணிகள் கடற்படையினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

